வீடுகளுக்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்...
கொரோனா முழு அடைப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், வீடுகளுக்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா முழு அடைப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், வீடுகளுக்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் 1200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% மக்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கின்றன. அரசு ஊழியர்கள், அமைப்பு சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த இரு பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அளவு 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும். அமைப்பு சார்ந்த பணியாளர்களில் கூட குறிப்பிட்ட பிரிவினருக்கு ஊதியக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் தமிழகத்தின் பெரும்பான்மை தொழிற்பிரிவான உழவர்கள் வாழ்வாதாரங்களை இழந்தது மட்டுமின்றி, பாடுபட்டு விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
மற்றொருபுறம் ஊரடங்கு காரணமாக அனைத்துத் தரப்பினரும் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பதால், வீடுகளின் மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் சராசரி மின்பயன்பாடு ஒரு நாளைக்கு 32 கோடி யூனிட்டுகள் ஆகும். தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் மூடப் பட்டு உள்ள நிலையில் மின்பயன்பாடு சராசரியாக 40% குறைந்து 19.80 கோடி யூனிட்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் நேற்றைய மின்பயன்பாடு 24.09 கோடி யூனிட்டுகள் ஆகும். இது இயல்பான அளவை விட 20 விழுக்காட்டுக்கும் கூடுதலான பயன்பாடு ஆகும். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருப்பதால் தான் மின்சாரப் பயன்பாடு பெருமளவில் அதிகரித்திருக்கிறது.
ஒருபுறம் மக்களின் வருமானம் முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில் மின்சாரப் பயன்பாடு தினமும் அதிகரித்து வருகிறது. வாழ்வாதார இழப்பால் மக்கள் பசி, பட்டினியில் வாடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவசமாக உணவு தானியங்களும், நிதியுதவியும் வழங்கி வருகிறது. மக்களின் துயரை உணர்ந்தும், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை ஏற்றும் கல்விக்கட்டணம், மாதாந்திர கடன் தொகை ஆகியவற்றை செலுத்த கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எந்த வருமானமும் இல்லாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மின்கட்டணத்தை மட்டும் எவ்வாறு செலுத்த முடியும்? என அரசு சிந்திக்க வேண்டும்.
ஊரடங்கு ஆணை மே 3-ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டால் கூட, அதன்பின் இயல்பு நிலை திரும்பி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்து வருவாய் ஈட்டுவதற்கு இன்னும் சில மாதங்களாவது ஆகும். அதற்குள்ளாக கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கட்டணங்களை கடன் வாங்கித் தான் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன் மின்கட்டணத்தையும் செலுத்துவது என்பது இன்றைய சூழலில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சற்றும் சாத்தியமற்றதாகும்.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சுழற்சியில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தில், மாதத்திற்கு 500 யூனிட்டுகள் வீதம் இரு மாதங்களுக்கு 1000 யூனிட்டுகளுக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.