இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, அதன் துணை நிறுவனங்களான புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், தில்லியில் உள்ள தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் காலியாக உள்ள சி மற்றும் டி நிலையிலான அறிவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்புவதில் எந்த பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படாது எனவும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் சி, டி மற்றும் டி நிலை மருத்துவ அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டு விதிகள் பொருந்தாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. 


மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் இளநிலை மருத்துவ அறிவியலாளர் பணி என்பது பி நிலை பணியாகும். அதற்கு மேல் சி, டி, இ, எஃப், ஜி, எச் ஆகிய நிலை வரை மருத்துவ அறிவியலாளர் பணிகள் உள்ளன. இவற்றில் இளநிலைப் பணியான பி நிலை தவிர மீதமுள்ள எந்தப் பணிக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இது நியாயமற்றது.


ஒப்பீட்டளவில் உயர்ந்த மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவங்களான எய்ம்ஸ், முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஓதுக்கீடு மறுக்கப் படுவது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவோ, அதன் நிறுவனங்களோ இடம் பெறவில்லை. 


உயர்கல்வி நிறுவனங்கள், உயர் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் தகுதிக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, இட ஒதுக்கீட்டை முடக்கும் சதித் திட்டங்கள் அண்மைக்காலமாக தீட்டப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாகத் தான் அண்மையில் ஐஐடிகள் எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று இராம்கோபால் ராவ் குழு பரிந்துரைத்து இருந்தது. 


இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும். இட ஒதுக்கீடு எந்த வகையிலும் தகுதியை பாதிப்பதில்லை என்பது பல்வேறு தருணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சில நிறுவனங்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பது என்ற கொள்கை திருத்தப்பட வேண்டும். 


ALSO READ | அமெரிக்காவில் H-1B விசா தடையை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவு