தமிழ்நாட்டு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் சில பாடங்களுக்கான வினாத்தாள்களை தமிழில் தயாரிக்க முடியாது என்றும், அப்பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில்  மட்டும் தாம் இடம் பெறும் என்றும் தேர்வாணைய செயலர் நந்தக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த  நேர்காணலில் கூறியிருந்ததை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியவில்லை என்றால் தேர்வாணையத்தை இழுத்து மூடிவிடலாம் என்றும் கூறியிருந்தேன்.


தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாற்றுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றிரவு தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிக்கையில், வரும் 11&ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுகள் மற்றும் பின்னர் நடைபெறவுள்ள  முதன்மைத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.


ஆனால், இன்னமும் சில பாடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில் உறுதி செய்துள்ளது. ‘‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப் படுகின்றன’’ என்று தேர்வாணைய அதிகாரி சுதன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய் என்பது மட்டுமின்றி, நேற்று முன்நாள் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறப்பட்ட தகவல்களில் இருந்து  முற்றிலும் மாறுபட்டதாகும். இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளை தெளிவாக விளக்குகிறேன்.


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆணையத்தின் செயலர் நந்தகுமார், ‘‘அரிதிலும் அரிதான சில பாடங்களுக்கு உதாரணமாக அரசியல் அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களுக்கு வினாத்தாள் தயாரிக்க அந்தத் துறைகளில் தகுதி பெற்ற பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் அப்பாடங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் வினாக்கள் கேட்கப் படுகின்றன’’ என்று தெளிவாகக் கூறியிருந்தார். 


ஆனால், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கத்திலோ, சில பாடங்கள் ஆங்கில வழியில் மட்டுமே நடத்தப்படுவதால் தான் அவற்றுக்கு தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்திருக்கிறார். ஓர் அமைப்பின் இரு அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களில் இந்த அளவுக்கு முரண்பாடுகள் ஏன்?


தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்படும் பாடங்கள் அல்ல. சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், ஏராளமான கல்லூரிகளிலும் இந்த இரு பாடங்களும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகின்றன. நேரடி வகுப்புகளில் மட்டும் தொலைநிலைக் கல்வி முறையிலும் இந்த பாடங்கள் தமிழ் வழியில் கற்பிக்கப் படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அந்தப் பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? இது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?


இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ்நாட்டு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழில் தேர்வு நடத்துவதற்கு ஏதேனும் முட்டுக்கட்டைகள் இருந்தால் அவை உடனடியாக களையப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு  உண்டு. அதை செய்யாமல் தமிழுக்கு துரோகம் இழைப்பதையும், அந்த உண்மைகளை சுட்டிக்காட்டினால்  அதை அவதூறு என்று பழி போடுவதையும் தமிழ் உணர்வாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதி தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடத்தப்பட்டதையும், விடைத்தாள்கள் மாற்றப்பட்டதையும் பாட்டாளி மக்கள் கட்சி தான் அம்பலப்படுத்தியது. அதுகுறித்த சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தான் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியும் மாற்றப்பட்டனர். இந்தப் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு இளம் அதிகாரிகளும் நேர்மையானவர்கள்.


அவர்கள் ஆணையத்தின் இழந்த பெருமையை மீட்கும் பணிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, தமிழுக்கு எதிரானவர்களின் கைகளில் சிக்கிய பொம்மைகளைப் போல ஏற்கனவே கூறிய தகவல்களை மாற்றிப் பேசுவதும், பொய்யுரைப்பதும் கூடாது. இது அழகல்ல. அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்த பாடமாக இருந்தாலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதற்கான வினாக்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கேட்கப்படும் என்ற நிலை உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.