வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து பாமக கட்சித்தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிற்றவற்றில் வன்னியர் சமூகத்திற்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சென்னையில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக அறிவித்தது. அப்போதைய அதிமுக கோரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி வெளிமாவட்டங்களில் இருந்து போராட்டத்திற்கு வந்தவர்களை சென்னையின் எல்லைகளில் தடுத்து நிறுத்தியது காவல்துறை.


இதன் காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட தொண்டர்கள் ஒரு கட்டத்தில் சாலை மறியலிலும் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் அங்கு அரங்கேறியது. இது ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க மறுபுறம் சென்னையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த  பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸை (Anbumani Ramadoss), அப்போதைய முதல்வர் எடப்படி பழனிசாமி அழைத்து பேசினார் இந்த சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ் ஏதோ ஒரு சாதிப் பிரச்னை இல்லை. யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. எந்த அமைப்புக்கும், சமுதாயத்துக்கும், அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது.


இது ஒரு சமூகநீதிப் பிரச்னை. இதை தமிழகத்தின் வளர்ச்சிப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். இந்தச் சமூகம் முன்னேறினால்தான், தமிழகம் முன்னேற்றம் அடையும் என்றெல்லாம் பேசியிருக்கிறோம். முதல்வரும் அதைக் கேட்டுக்கொண்டு, நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்கள். இதன்படி பாமகவின் (PMK)  போராட்டம் முடிவுக்கு வந்ததுடன் அதன் பின்பு வேறு போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்று கூறினார். 


2021 ஜனவரி மாதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூடிய நிர்வாகக்குழு கூட்டத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத முழுமையான இட ஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும், இதனை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிர்வாகக்குழு கூட்டத்திற்கு சில நாட்கள் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக-வினர் முதல்வரை சந்தித்து பேசிய பின்பு இந்த முழுமையான இட ஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி உள் ஒதுக்கீடு தீர்மானமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் பாமக அதிமுக (AIADMK) கூட்டணியில் நீடிக்க இந்த தீர்மானம் மூலமும் அழுத்தம் கொடுத்ததன் விளைவாக 2021 பிப்ரவரி 26ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 


ALSO READ: வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்து -உயர்நீதிமன்ற அதிரடி 


இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அன்றைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும்’ என  கூறினார்.


இதன் விளைவாக பாமக அதிமுக கூட்டணியில் நீடித்ததன் மூலம் வடமாவடங்களில் தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என அதிமுக நினைத்தது இந்த சட்ட மசோதா நிறைவேற்ற மற்றொரு முக்கிய காரணம். 


எம்பிசி பட்டியலில் உள்ள 68 சாதிகள் இந்த உள் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் என கூறி இந்த 68 சாதிகளை உள்ளடக்கிய சமூக நீதிக் கூட்டமைப்பினர் , எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியும், பல இடங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்பதற்கு வன்னியர் உள்ஒதுக்கீடு மிகமுக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்களும், முன்னாள் அமைச்சர்களும் தோல்விக்குப்பின் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.


சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றத்திர்க்கு பின் 10.5% இட ஒதுக்கீட்டில் அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஜூலை 26ஆம் தேதி 10.5% உள் ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டது.


இதை தொடர்ந்து எம்.பி.சி பிரிவிலிருந்து வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டதிற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி துரைசாமி அமர்வுக்கு மாற்றியது. இவ்வழக்கை தொடர் விசாரணை நடத்திய நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளிசங்கர் அமர்வு நேற்று வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையைச் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.


இதை தொடர்ந்து சேலம்,விழுப்புரம், அரியலூர், நெய்வேலி, கடலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பாமக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாமக கட்சியினரால் அவ்வழியாக வந்த அரசுப்பேருந்தின் முகப்பு கண்ணாடி கல்லெறிந்து உடைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் இரவுதான் அவர்களை விடுவித்தனர்.



ALSO READ:தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G