நாளை 9 ஆம் தேதி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் மனிதச்சங்கிலியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் நாளை 9 ஆம் தேதி சனிக்கிழமை மனிதச்சங்கிலி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவளிக்கும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதில் சட்டரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. அதனடிப்படையில் தான் தமிழக அமைச்சரவையும் 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 181 நாட்களாகி விட்ட நிலையில், அதன் மீது இன்று வரை ஆளுனர் மாளிகை முடிவெடுக்காததன் பின்னணிக் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.


7 தமிழர் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி முயன்று வருகிறது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் நான் நேரில் வலியுறூத்தியுள்ளேன். அதிமுகவுடனான கூட்டணிக்கான 10 கோரிக்கைகளில்  ஒன்றாக 7 தமிழர்கள் விடுதலையும் சேர்க்கப்பட்டுள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தியதுடன், அதற்கான மனுவையும் அளித்துள்ளேன்.


7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு  சாதகமான பலன்கள் தென்படத் தொடங்கியுள்ளன. வெகுவிரைவில் அவர்கள்  விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது. 28 ஆண்டுகளாக  சிறைகளில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும்; வெற்றி பெறும்.


பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட இருப்பது குறித்தும், அப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் என்னை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அப்போதே அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு பாமக ஆதரவை தெரிவித்திருந்தேன்.


அதன்படி, சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய தமிழக நகரங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மாலை நடைபெறவுள்ள மனிதச்சங்கிலியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கைக்கோர்ப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.