ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுளதாவது...


"ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் இன்றுவரை முடிவெடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காததை பாட்டாளி மக்கள் கட்சி கண்டிக்கிறது.


ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம்  பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை.


மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டைக் காரணமாக 7 தமிழர்களின் விடுதலை கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 7 தமிழர்களின் நடத்தை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 45-நாட்கள் ஆகியும் அதன் மீது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவையும் எடுக்காதது நியாயமல்ல.


7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் இரு வகையான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். ஒன்று அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து ஆணை பிறப்பிக்கலாம் அல்லது அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க முடியாது என்று கூறி மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைக்கலாம். இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகபட்சமாக ஒருவாரம் போதுமானது. ஆனால் 45-நாட்கள் ஆகியும் அமைச்சரவை தீர்மானத்தின்மீது முடிவெடுப்பதை ஆளுநர் தாமதிப்பது பல்வேறு ஊகங்களையும் ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின்மீது ஆளுநர் முடிவெடுக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டே 7 தமிழர்கள் விடுதலைக் குறித்து முடிவெடுப்பதை ஆளுநர் விருப்பம்போல் தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி அமைச்சரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் தீர்மானத்தின் மீது  ஆளுநர் சட்ட ஆலோசனைகளை பெறமுடியும் ஆனால் இந்த விஷயத்தில் இதுதொடர்பாக யாரிடமும் எந்த ஆலோசனையும் பெறப்பட்டதாக தெரியவில்லை. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக ஆலோசனை கேட்கப்போவதில்லை என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது. இத்தகைய சூழலில் 7 பேர் விடுதலைக் குறித்த முடிவை ஆளுநர் இனியும் தாமதிக்க முடியாது.


7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருமுறை ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்து அரசுத்தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதை வைத்து பார்க்கும்போது 7  தமிழர் விடுதலையில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து அளிக்கப்பட அழுத்தங்களுக்கு பணிந்துதான் அரசு பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது என்றும் தான் நினைக்க தோன்றுகிறது. தமிழக அரசின் இந்த அலட்சியப்போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.


குற்றவழக்குகளில் தவறாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காகவே அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொள்ளுவதுதான் இயற்கை நீதி ஆகும். அதற்கு மாறாக அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதன் மூலம் அவர்களின் விடுதலையை தடுக்க முயல்வது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். இந்தப்போக்கை கைவிட்டு 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான  ஆணையை ஆளுநர் விரைந்து பிறப்பிக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்!