அரசியல் லாபத்திற்கு சாதி வன்முறை வெறியாட்டத்தில் சிதைந்த பொன்பரப்பி கிராமம்!!
சாதி வன்முறை வெறியாட்டத்தில் மீண்டும் யாரும் ஈடுபடாதப்படி தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 18 அன்று தேர்தல்கள் நடைபெற்றது. அப்பொழுது சில இடங்களில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தேறியது. அதில் குறிப்பாக சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வசித்து வந்த தலித் மக்கள் மீது சில ஆதிக்சாதியினை சிலர் தாக்குதலை நடத்தினார்கள்.
சுமார் 120-க்கு மேற்ப்பட்ட ஆதிக்சாதியை சேர்ந்த கும்பல் அருவாள், கத்தி, உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு பொன்பரப்பி கிராமத்தில் புகுந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பெண்களின் ஆடைகளை பிடித்து இழுத்துள்ளனர். மேலும் அந்த கும்பலை தலித் மக்கள் சாதியை குறித்து கேவலமாகவும், ஆபாசமாகவும் பேசியது குறித்த காணொளி சமூக ஊடங்களில் வெளியாகின. அந்த காணொளியில் "எவனையும் விடாத... அடிடா அவன.... விடாதடா பறப்பயலுகள...." என்று ஆதிக்சாதியை சேர்ந்த வன்முறை கும்பல் குரல் எழும்பியப் படியே தலித் மக்கள் மீதான தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட ஒரு கிராமமே அடித்து நொறுக்கப்பட்டது. 100-க்கு மேற்ப்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதில் 20 வீடுகள் முழுவதும் நொறுக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் பேனரும் கிழித்து ரோட்டில் எரியப்பட்டுள்ளது. அந்த வன்முறையில் ஒரு பத்திரிக்கையாளரும் மிகவும் கொடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்த 15-க்கு மேற்ப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்துக்கு காரணமாக இதுவரை 25-க்கு மேற்ப்பட்டோர் கைது செய்து வழக்கு போடப்பட்டு உள்ளது. பலர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, பானை சின்னத்திற்கு ஓட்டு போட்டதால் தான் தலித் மக்கள் மீது பாமக-வை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது. இதுக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதவாதம், சாதியவாதத்தை எதிர்போம் எனக்கூறி மேடைக்கு மேடை பேசும் சில அரசியல் கட்சிகளும், இதுபோன்ற வன்முறை செயலுக்கு உடந்தையாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது. பொன்பரப்பி சம்பவத்தைதில் யார் தவறு செய்தார்களோ, அவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. தேவைப்பட்டால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சாதி வன்முறை வெறியாட்டத்தில் மீண்டும் யாரும் ஈடுபடாதப்படி தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
அதேவேளையில் வன்முறையில் சேதமடைந்த வீடுகளுக்கும் காயமடைந்த மக்களுக்கும் உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.