கோடநாடு வழக்கு...சசிகலாவிடம் நாளையும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று சசிகலாவிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் நாளையும் விசாரணை நடத்தவுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கின் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | கோடநாடு வழக்கு...சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
இதனைத் தொடர்ந்து எஸ்டேட் குறித்த தகவல்களை அறிந்தவர் என்பதால் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி சென்னை தியாகராயா நகரில் உள்ள வீட்டில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை உணவு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்ந்தது.
சசிகலாவிடம் இன்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன ஆவணங்கள், பணம், நகைகள் இருந்தன?, கோடநாடு பங்களா சாவி யாரிடம் இருக்கும்?, பங்களா பொறுப்பு யாரிடம் இருந்தது?, ஓட்டுநர் கனகராஜ் போயஸ் கார்டனில் பணியாற்றினாரா?, ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த ஆவணங்கள் என்ன? சம்பவத்திற்கு பின் நேரில் சென்று பார்தீர்களா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டன.
இந்த விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அவரது வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் நாளையும் விசாரணை தொடருமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொள்ளை முயற்சிகள்! மர்மம் என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR