டெல்லியில் தமிழக விவசாயிகள் மீது கொடூரமாக தடியடி நடத்திய போலீஸ்
தமிழக விவசாயிகள் 25-வது நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிடுவதற்காக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், விவசாயிகள் தொடர்ந்து முன்னேறினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதில் விவசாயிகள் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.