தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் ஆண்டுதோறும் இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
 
இதில் முதல் வணை முகாம் ஜனவரி 28-ம் தேதி நடைபெற்றது. 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று காலை 7 மணி-க்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.  


சென்னையில் கோயம்பேடு, பிராட்வே, தியாகராயநகர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதன்மை சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. சென்டிரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முகாம்கள் அமைத்து மருத்துவ அதிகாரிகள் சொட்டு மருந்து வழங்கினர். அடையாறு பகுதியில் மாநகராட்சி மண்டல மருத்துவ அதிகாரிகள் விஜய சாமுண்டீஸ்வரி, உஷா, உதவி அதிகாரி என்.கிருஷ்ணவேணி ஆகியோர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தனர். பல்வேறு பகுதிகளில் நடமாடும் முகாம்கள் மூலம் மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் நேற்று நடந்த முகாம்களில் சுமார் 66 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது 93 சதவீதம் ஆகும். சென்னையில் 6¾ லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது 94.25 சதவீதம் ஆகும். சொட்டு மருந்து வழங்கப்படும்போதே, குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.


இதே போல தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த ஜனவரி 28ம் தேதியை தொடர்ந்து தெற்கு ரயில்வே சார்பில் 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது.