மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கி, மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... "மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல என்று தீர்ப்பளித்திருப்பது  மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சமூகநீதியை சிதைக்கக் கூடிய இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.


கடந்த சில ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு, சமூகநீதி தொடர்பான வழக்குகளில் எதிர்மறையான  தீர்ப்புகளையே உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கி வருகின்றன. இது சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு என்பது ஒருபுறமிருக்க, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை தவறாக புரிந்து கொள்வது தான் இதற்கு காரணம் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான  பிரிவுகள் மூன்றாவது பகுதியில் தான் இடம் பெற்றுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பகுதியே அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது ஆகும். இட ஒதுக்கீடு என்பது மக்களின் உரிமை என்பதற்கு அது அரசியல் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் இடம் பெற்று இருப்பதே போதுமானதாகும்.


அதுமட்டுமின்றி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகளால் தொடரப்பட்ட வழக்கு என்பது இட ஒதுக்கீடு கோரும் வழக்கு அல்ல. இருக்கும் இட ஒதுக்கீட்டை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுகிறது; அது களையப்பட வேண்டும் என்பது தான் முதன்மை கோரிக்கையாகும். அகில இந்திய  தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவ இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர்வகுப்பு  ஏழைகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது; ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  மட்டும் 27% இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது; இது ஒரு பிரிவுக்கு மட்டும் காட்டப்படும் பாகுபாடு (Selective Discrimination) என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கையை பரிசீலிக்காமல் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் சமூகநீதிக்கு பெருஞ்சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சேதம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.


READ | பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ 4000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு!


கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4) பிரிவில் ஷிலீணீறீறீ (Shall) என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படியான அடிப்படை உரிமை என்பது தெளிவாகிறது. அதற்குப் பிறகும் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்பது நீதிமன்றங்கள் மீண்டும், மீண்டும் கூறி வருமானால், அதுகுறித்து தெளிவை ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்துவது தான் சிறந்த வழியாகும்.


கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் எதிர்மறையான தீர்ப்புகளை வழங்கியபோதெல்லாம் மத்திய அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இல்லை.  மாறாக, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து சமூகநீதிக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதேபோல், இப்போதும் இடஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்து இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.


அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு கூறப்படும் காரணமும் தவறானது. 27% இட ஒதுக்கீடு தொடர்பாக சலோனிகுமாரி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் தான் அந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியவில்லை என்று மத்திய அரசு கூறி வருவதை ஏற்க முடியாது. உண்மையில் சலோனி குமாரி வழக்கு 27% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு அல்ல. மாறாக, 27% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தொடரப்பட்ட வழக்கு ஆகும். மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக ஒத்துக் கொண்டால் அடுத்த நிமிடமே அந்த வழக்கு திரும்பப் பெறப் பட்டு விடும். எனவே, அந்த வழக்கை காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை மத்தியஅரசு மறுக்கக் கூடாது.


READ | ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1.6 லட்சம் வட்டியில்லா கடன்; மத்திய அரசு திட்டம்!


சலோனிகுமாரி வழக்கை காரணம் காட்டாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கி, மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும். அதேபோல், இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டம் நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக அவசர சட்டம் ஒன்றை  மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளது.