பொள்ளாச்சி விவகாரம்: வரும் 10ம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
தமிழகத்தையே நடுங்க வைத்த பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தையே நடுங்க வைத்த பொள்ளாச்சி விவகாரத்தில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என 4 குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது தமிழக போலீசார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சில மணிநேரங்களில் பொள்ளாச்சி விவகார வழக்கை சிபிஐ அமைப்புக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையில் புகார் அளித்தவர்களின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்பட்டது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது.
இந்த வழக்கு உண்மைத்தன்மையாக நடைபெற உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விகே தகில்ரமனி, நீதிபதி கே.துரைசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் அடுத்த மாதம் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பொள்ளாச்சி விவகாரம் குறித்து தமிழக அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்பினார்கள். மீண்டும் வழக்கு ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.