பொங்கல் பரிசு, பொங்கல் விடுமுறை அடுத்து அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது
தமிழகத்தை பொருத்த வரை தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகைக்குத்தான் மவுசு மற்றும் மதிப்பும் அதிகம். பொங்கல் பண்டிகை வந்து விட்டாலே தமிழகம் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கோலாகலமாக பொங்கல் விழாவை சிறப்பித்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சிறப்பான பொங்கல் பரிசை அறிவித்து, வழங்கி வருகிறது தமிழக அரசு. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.
இன்று தமிழக மக்களுக்கு மேலும் இரண்டு பெரிய இன்ப அதிர்ச்சியை பரிசாக அறிவித்துள்ளது தமிழக அரசு. ஒன்று தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வரும் 14 ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்த்துள்ளது. இதனால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இரண்டாவது இன்ப அதிர்ச்சி.. தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இவர்களுக்கு 30 நாட்களுக்கு இணையான தொகையை போனசாக வழங்க தமிழக நிதித்துறைக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஆணையிட்டு உள்ளார்.