பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த ஆண்டு காவல்துறையில் பணியாற்றும் 3000 பணியாளர்களுக்கு 'தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள்' வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 பேர்களுக்கும் 'தமிழக முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்' வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும்.


மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு 'தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்' வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் இப்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வரால் பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.