சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்!
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்!
தமிழ்நாட்டில் சிலைக்கத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல். இவரது பதவிகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் தான் விசாரித்து வந்த வழக்கின் ஆவணங்களை தற்போது கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம் ஒப்படைத்தார்
முன்னதாக அவரது பதவிகாலம் முடிவடைந்த நிலையில் வழக்கின் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. எனினும் அவர் குறித்த ஆவணங்களை சமர்பிக்கவில்லை, இதனையடுத்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து பொன்.மாணிக்கவேல் அவர்கள் ஒரு வாரத்தில் அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அதுகுறித்து அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். இந்த ஆணையின் பேரில் தற்போது பொன்.மாணிக்கவேல் அவர்கள் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம் ஒப்படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற நூற்றுக்கணக்கான ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இவற்றை மீட்பது குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டிருந்த நிலையில், இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணை அதிகாரியாக பொன். மாணிக்கவேலுவை நியமித்தது. அதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
தஞ்சாவூர் இராஜராஜன் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு குஜராத் அடுங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இராஜராஜன், உலகமாதேவி சிலைகளை மீட்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், அச்சிலைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு மீட்டு வந்து தஞ்சை பெரியகோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
தமிழகத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாணிக்கவேல் தலைமையிலான குழு தீவிரப்படுத்திய நிலையில், அவரது செயல்பாடுகளுக்கு தமிழக ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டைப் போடத் தொடங்கினர். வேலூர் கோவில் சிலை திருட்டை கண்டுபிடித்த இவர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வந்தவர். இதனிடைய இவரது தலைமையிலான விசாரணை குழுவிடம் இருந்து இந்த வழக்கினை CBI விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பலதரப்பு முட்டுகட்டைகளையும் தாண்டி தனது பணியை செம்மையாக செய்து வந்தார் பொன்.மாணிக்கவேல்.
கடந்த 2018- ஆம் ஆண்டு நவம்பர் 30- ஆம் தேதி ஓய்வுபெற்ற பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு IG-யாக DS அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு டிசம்பர் 3-ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.