மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பலருடைய தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில், தேர்தலை நியாமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் எனவும் ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விட கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகள் உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12A முறையாக வழங்கப்படவில்லை எனவும் சிறு காரணங்களுக்காக கூட தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.


மேலும், அரசு பணியாளர்களான காவல் துறையை சேர்ந்தவர்கள் 90,002 பேரின் தபால் வாக்குகள் முழுமையாக பதிவான தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அரசு ஆசிரியரகள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4,35,003 பேருக்கு தபால் வாக்கு அளிக்க படிவங்கள் வழங்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், முறையாக படிவங்கள் நிரப்பாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.


இதையடுத்து, தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வருங்காலத்தில் தபால் ஓட்டுக்கள் பதிவில் இது போன்ற குழப்பங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.