“பொய்கள் பேசுவதே பிரதமர் மோடியின் ஸ்பெஷாலிட்டி” -மு.க. ஸ்டாலின்
கடந்த ஐந்து ஆண்டுகளாக பொய்களையே பிரதமர் மோடி பேசி வருகிறார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லி: தோல்வி பயத்தால் மேலும் மேலும் பொய்கள் பேசி வருகிறார் பிரதமர் மோடி. இதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வருகிற 19 ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. அப்பொழுது தமிழகம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாடு முழுவதும் வாக்குபதிவு நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதேபோல் 18 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது.
அதேபோல தமிழகத்தில் வரும் மே 19 ஆம் தேதி 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற உள்ளது. இதற்க்கான தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். அதுக்குறித்து திமுக தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, பொய்கள் மூலமாகவே ஆட்சி நடத்தி, இப்போது தோல்வி பயத்தால் மேலும் மேலும் பொய்கள் பேசி வருகிறார்; இதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி" என மு.க. ஸ்டாலின் உரையாற்றியதாக கூறப்பட்டு உள்ளது.