மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 


இதேபோல் நாளை புதுச்சேரி ஆரோவிலில் நடைபெறும் நிகழ்விலும் பங்கேற்கிறார். இதற்கான முழுப்பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து விமானம் மூலம் மாலை 5.20 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார்.


அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு சென்று பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் தொடங்கி வைக்கிறார். 


இதன்பின் மாலை 6.50 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் அவர், இரவு அங்கு தங்குகிறார். இதனையடுத்து நாளை புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள செல்கிறார். இதற்கிடையே தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க, ஆளும் அ.தி.மு.க சார்பிலும் பாஜக சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.