தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பருவமழை பொய்த்ததன் விளைவாக சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு குழாய்களில் தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகின்றன.


இதன்காரணாமக குடிநீருக்காக செய்வதறியாது மக்கள் தவித்து வருகின்றனர்., தற்போதைய சூழலில் சென்னை வாசிகளுக்கு தண்ணீர் லாரிகளே கடவுளாக காட்சி தருகின்றன. 


இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இது மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் தெரிவிக்கையில்., நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்த தொடங்கிவிட்டது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். 


இந்த நடைமுறைக்கு முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் கையேந்தி நிற்கிறோம். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது. ‘கனிம வளத்தில் நீரை சேர்த்துவிட்டோம், எனவே அரசு தவிர தனியாருக்கு இந்த உரிமம் தர இயலாது’ என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். 


எனவே மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.