பேராசிரியர் முகமது அப்துல் காதரின் வெல்லப் போவது நீதான் புத்தகத்தின் விமர்சனம்
Vella Povathu Nee Than Book Review: பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர் எழுதிய வெல்லப் போவது நீதான் (மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி ) பிரதியை ’தி இந்து குழுமம்’ தமிழ் இந்து திசை 2022இல் 100 பக்கங்களோடு வெளியிட்டுள்ளது.
Tamil Books Review: பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர், சென்னை மதுராந்தகம் அருகிலுள்ள செண்டு பொறியியல் கல்லூரியில் முதல்வர் மற்றும் டீன் போன்ற பதவிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் நாளிதழ் வார இதழ்களில் மாணவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தன்னம்பிக்கை கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும், தன்னம்பிக்கை சார்ந்த ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். குறிப்பாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னம்பிக்கை சார்ந்து உரையாற்றி மாணவர்கள் வெற்றிப் பாதையில் செல்ல ஊக்கப்படுத்தி வருகிறார்.
திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம், மாணவர்களின் மறதியை விரட்ட உதவும் மகத்தான பயிற்சிகள், கவனிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள், தாழ்வு மனப்பான்மையே வெற்றியின் தடை, பொறுமையே வெற்றியின் திறவுகோல், உயர்ந்த இலக்கைத் தீர்மானியுங்கள், தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், தேர்வு முடிவல்ல....ஆரம்பம்!., என்ன படிப்பது? எங்கு படிப்பது?, உதவிக்கரம் நீட்டும் உதவித் தொகைகள், கல்லூரியில் காலடி வைக்கும் மாணவர்களே!, கல்லூரிப் பருவத்தில் தடம் மாறும் மாணவர்கள், இணையதளத்தில் இணையற்ற வாய்ப்புகள், குழு விவாதத்தில் வெற்றி பெறுவது எப்படி?, நேர்முகத் தேர்வு செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை.., உயர் கல்வியில் திறமைக்கு மட்டுமே அங்கீகாரம், திறமையை வெளிப்படுத்துங்கள்!, ஆர்வமே வெற்றியின் தூண்டுகோல், சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுங்கள், கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள், உயர்ந்த இலட்சியம் உங்களை உன்னதமானவர்களாக ஆக்கும், ஆசிரியர் பணி மகத்தானது!., இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன பத்து உறுதிமொழிகள் உள்ளிட்ட 24 தலைப்புகளில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் எழுத்தை அளித்துள்ளார்.
மேலும் படிக்க: கடல்சார் தொல் வாழ்வியலைத் தேடும் “யாத்திரை” -எழுத்தாளர் ஆர்என் ஜோ டி குருஸ்
வெல்லப்போவது நீதான் பிரதி பள்ளிப் படிப்பில் தொடங்கிப் பணிக்குச் செல்லும் வரையிலும் வழிகாட்டி, ஆலோசனை, நெறிப்படுத்துதல், அறிவுரை, தன்னம்பிக்கை, அனுபவங்கள் ஆகியவற்றை ஒருங்கே அளிக்கிறது. தாழ்வு மனப்பான்மையை அகற்றி நம்பிக்கையை அளிக்கும் பிரதியாக எழுதியுள்ளார் பேராசிரியர் முகமது. மாணவர்களுக்கான விழிப்புணர்வு பிரதியாகவும் விளங்குகிறது.
பாடத்தைக் கவனித்தல் முறை, புரிந்துகொள்ளும் முறை, தேர்வுக்குத் தயாராகும் முறை, தேர்வு எழுதும் முறை, திட்டமிடுதல், படிக்கும் முறை, உற்றுநோக்குதல், நேர மேலாண்மை, நினைவாற்றலை வளர்த்தல், சிந்தித்தல், நேர்முகத் தேர்வு, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மதிப்பெண்கள் பெறும்முறை, உயர்கல்வியில் படிப்பைத் தெரிவு செய்தல் போன்றவற்றை எடுத்தியம்புகிறது. மேல்நிலை வகுப்பிற்குப் பின்னான உயர்கல்வியை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வியில் உள்ள துறைகளின் பெயர்கள், இளநிலை, முதுகலைப் பட்டங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கல்வி உதவித் தொகை திட்டங்கள் அது பெறும் வழிமுறைகளைப் பற்றியும் பதிவு செய்துள்ளது.
கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்குப் போதிய விழிப்புணர்வையும் அளிக்கிறது. உயர்கல்வி பயிலும்போது துறைசார் கூடுதல் அறிவைப் பெற இணையப் பக்கங்களையும் குழுவினரோடு இயங்க வேண்டி முறைகளையும் அறிவித்துச் செல்கிறது. உயர்கல்வியில் மதிப்பெண்ணைவிட திறமைக்கு மதிப்பு அதிகம் என்பது பற்றியும் கல்லூரிப் படைப்பை முடித்து பணிக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது பற்றியும் கூறப்பட்டுள்ளது. பொறுமை, நிதானம், அமைதி, திட்டமிடல், தொலைநோக்குப் பார்வை, ஆழமாகச் சிந்தித்தல், சுழலை உள்வாங்குதல், திறனை வளர்த்தல், நேர்மறை சிந்தனை போன்றவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்கிறார் பேராசிரியர் முகமது.
மேலும் படிக்க: ஹேபர்மாஸ் : ஆய்வுப் போக்கும் நிலைப்பாடும் - இரா.முரளி
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்க பெரும்பாலும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சிந்தனை, கருத்து, செயல், பொன்மொழிகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் பேராசிரியர் முகமது. மேலும், திருவள்ளுவர், லூயிஸ் பிரெய்லி, ஹெலன் கெல்லர், ஸ்டீபன் ஹாக்கிங், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர்.சி.வி.இராமன், தான்சன், குருசாமி, காவியா, முகம்மது சுஹைல், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் போன்ற ஆளுமைகளை நம்பிக்கையின் துணைகளாக்கிப் பேசியுள்ளார். நம்பிக்கைத் தரும் வாசகங்கள், பிரபலமான(வர்களின்) தொடர்களையும், கதைகளையும், குறிப்புகளையும், சொல்லாட்சியையும் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்லப் போவது நீதான் பிரதியை எளிமையான மொழிநடையில் மாணவர்கள் வாசிப்பதற்காக எழுதி இருந்தாலும் தன்னம்பிக்கையைக் கோருபவர்களுக்கும் தன்னம்பிக்கை பேச்சாளர்களுக்கு உற்ற துணையாக நிற்கக்கூடிய பிரதியாக விளங்குகிறது. பிரதியில் உள்ள ஏராளமான எழுத்துப் பிழைகள் வாசகனின் வாசிப்பு ஓட்டத்தை கேள்விக்குள்ளாக்க வாய்ப்புள்ளது. இதனால், இப்பிரதி அவசரகதியில் வெளியிடப்பட்டுள்ளதா? என்பதான ஐயம் ஏற்படக் கூடும். இருப்பினும் நம்பிக்கை வெற்றியாக மாற்றும் பிரதியாக வெல்லப்போவது நீதான் உள்ளது.
மேலும் படிக்க: மான்டேஜ் மனசு - 'காதல் சூழ் உலகு'... திரைக் காதலை காட்டும் சுவாரஸ்யமான புத்தகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ