PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
பாலியல் துன்புறுத்தலில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்த பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் மற்றும் பள்ளி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பி.எஸ்.பி.பி (PSBB) மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
பெண்களுக்கு பிரச்சனை என்றால், முதல் குரலாக ஒலிக்கும் திமுக எம்.பி. கனிமொழி (Kanimozhi MP), பி.எஸ்.பி.பி பள்ளியின் பாலியல் தொல்லை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாலியல் புகார் (Sexual Harassment) விவகாரத்தில் பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் மீது நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தனியார் பத்ம சோஷத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் போது, மாணவிகளிடம் அநாகரீகமான கேள்வி, அவர்களின் உருவத்தோற்றத்தை கேலி செய்வது, வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்ப சொல்வது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதுக்குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆசிரியர் ராஜகோபாலன் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்துள்ளார். அவர்களை மிரட்டியும் உள்ளார். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வந்த மாணவிகள், பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவை பாடகி சின்மயி தன்னுடைய சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ALSO READ | 17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக பிரபல நடிகர், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR