அப்துல் கலாம் சிலை முன்பு குரான், பைபிள் வைப்பு!
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார். அந்த மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது.
அப்துல் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே பைபிள், குரான் புத்தகங்களை வைத்தார் அவரது அண்ணன். பின்னர் பேசிய அவர், அப்துல் கலாம் அனைத்து மதத்துக்கும் அப்பாற்பட்டவர், அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறினார்.