கருணாநிதி நேரில் நலம் விசாரித்த ராகுல் காந்தி!
கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சில தினங்களுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நேற்று காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- சளித் தொற்று மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு காரணமாகக் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கருணாநிதிக்கு முச்சுத்திணறலுக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் சீராக முன்னேற்றம் பெற்றுள்ளது. இதற்கிடையே அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் நலமாக உள்ளார். அவர் நேற்றிரவு சிறிது நேரம் மடிக்கணினியில் ரஜினி நடித்த‘பாட்சா’ படத்தை பார்த்து ரசித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை பார்க்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ப.சிதம்பரம் மற்றும் இன்னும் சில தலைவர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வருகிறார். கோவாவில் இருந்து தனி விமானத்தில் அவர் சென்னை வந்தார்.
நேராக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு. ஈவி.கே.எஸ். இளங்கோவன் இருந்தனர். ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பிறகு ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்த்தித்து பேசினேன். கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார். கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற சோனியா காந்தி வாழ்ந்த்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.