தமிழகத்தில் ஓரிரு நாட்கள் மழை தொடரும் - சென்னை வானிலை மையம்
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்கள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையினால் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் சில இடங்களில் போதிய மழை பெய்யவில்லை. நேற்று மட்டும் சென்னையில் அதிகப்பட்சமாக 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சுமார் ஒன்றை மணி நேரம் மழை பெய்தது. மேலும் பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இவ்வருடத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை பொழிவு இதுதான்.
சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் இன்று பேட்டி அளித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.