தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் காயப்படுவீர்கள் என ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் வகையில் உங்கள் நான் என்ர நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்; EPS முதல்வராவார் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால், அதிசயம் நடந்தது. தமிழக அரசு இப்போது கவிழ்ந்து விடும், அப்போது கவிழ்ந்துவிடும் என்றார்கள். அதுவும் 99 சதவீதம் பேர் இதைத்தான் சொன்னார்கள். ஆனால் அதிசயம் அற்புதம் நடந்தது.


தடைகளை தாண்டி இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. அது போல் அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என்றார். ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு துணை முதல்வர், தமிழக அமைச்சர்கள் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், சென்னையில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் அரியணை ஆசை இருக்கும். சிறப்பாக நடைபெறும் அரசை விமர்சிக்கக்கூடாது. அதிமுக மீது கல்லெறிந்தால் அது அவர்கள் மீதே விழும். அதிமுக அரசையும், ஆட்சியையும் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். 


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வியை கடந்து தற்போதும் ஆட்சி நீடித்து வருகிறது. ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிசயம் நடந்தது, ஆட்சி நீடிக்கிறது என தெரிவித்த ஜெயக்குமார், ரஜினி சொல்லும் எந்த அதிசயமும் தமிழகத்தில் நடக்காது. அரசு மீதும், ஆட்சி மீதும் யாராவது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்களை தான் அது காயப்படுத்தும் என்றார். தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வர வேண்டும். அடுத்தவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வரக்கூடாது’ என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.