புதுடெல்லி: மகனின் விடுதலைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991 ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக  சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.


7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த விவாகரத்தில் இன்னும் தமிழக ஆளுநர் புரோகித் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வேண்டி பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் நீதி கேட்கும் பயணம் உட்பட பல போராட்டங்களை நடத்தி வருகிறார். 


இந்த நிலையில், இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்பொழுது இராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமித்ஷாவிடம் அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.