புது டெல்லி: வரும் ஜூலை மாதம் தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்கள் முடிவைடைய உள்ளது. அதில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். அந்த பதவியில் யாரை அமர்த்துவது என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த முறை மாநிலங்களவையில் அதிமுகவுக்கு நான்கு உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் ரத்தினவேல், மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன் ஆவார்கள். அதேபோல திமுகவுக்கு கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு டி.ராஜாவும் உறுப்பினர்களாக இருந்தனர். 


ஆனால் நடந்து முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வென்றுள்ளதால், இந்த முறை திமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும். அதேபோல அதிமுகவுக்கு ஒரு இடம் குறைந்து 3 இடங்கள் கிடைக்கும்.


இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கும் அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


திமுக-வை பொருத்த வரை ஒரு இடம் கூட்டணி விதிப்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டு யாருக்கு கொடுப்பது என்பது இன்னும் அறிவிக்கப்பட வில்லை.


அதேபோல அதிமுக - பாமக தேர்தல் கூட்டணி உடன்பாடு செய்த போது ஒரு மாநிலங்களவை பாமகவுக்கு வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள இரண்டு இடத்தில் ஒரு இடத்தை பாஜகவுக்கு தரும்படி பாஜக மேலிடம் அதிமுகவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாமகவுக்கு ஒரு இடம், பாஜகவும் ஒரு இடம் என இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்து விட்டால், அதிமுகவிடம் ஒரு இடம் மட்டும் தான் இருக்கும்.


மொத்தமுள்ள 6 இடங்களில் இரண்டு இடம் கூட்டணி உடன்பாடு படி, மதிமுக மற்றும் பாமகவுக்கு கிடைக்கும். மீதமுள்ள நான்கு இடங்கள் யாருக்கும் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.