சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18  பேரின் மறைவுக்கு PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டோம் நகரின் பாஹ்ரி பகுதியில் செராமிக் தொழிற்சாலையில் எரிவாயு டேங்கர் சரக்குந்து வெடித்து சிதறிய விபத்தில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். கொல்லப்பட்ட 23 ஊழியர்களில்  18 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தொழிற்சாலை வளாகத்தில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் சிதறிக் கிடந்ததால் எரிபொருள் டேங்கர் வெடித்த வேகத்தில் தொழிற்சாலை வளாகம் முழுவதும் தீ பரவியதாகவும், அத்தீயில் சிக்கி 23 பேர் உயிருழந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி விட்டதால் இறந்தவர்களின் பெயர் விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.


இந்த விபத்தில் 130 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 7 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.  காயமடைந்த 7 இந்தியர்களின் மூவர் தமிழர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை வெளியுறவுத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.


தீ விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் பெயர்கள் ராமகிருஷ்ணன், ராஜசேகரன், வெங்கடாச்சலம் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்களை அடையாளம் கண்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் அங்குள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் மொத்தம் 68 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாகவும், அவர்களில் 34 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், 16 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. காணமல் போனதாக கூறப்படும் இந்தியர்களை கண்டுபிடித்து மீட்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சூடானில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்ற விரும்புகிறார்களா.... தாயகம் திரும்ப விரும்புகிறார்களா? என்பதை அவர்களிடம் கேட்டறிந்து, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவும் சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்வர வேண்டும். ஒருவேளை அவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளை செய்து தருவதுடன், உள்ளூரில் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


சூடான் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களுக்கும், தீ விபத்துக்குக் காரணமான சலூமி செராமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் தலா ரூ.2 கோடி வீதம் இழப்பீடு பெற்று அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.