சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை இன்று ஒன்பதாவது நாளை எட்டியிருக்கிறது. அவர்களில் இரு வழக்கறிஞர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாதது கண்டிக்கத்தக்கது.


தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின் போது பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் ஏ.பி.ஷா இம்முயற்சிக்குத் துணை நின்றார்.


நீதியரசர் தெரிவித்த யோசனைகளின்படி, நீதிமன்ற நடவடிக்கைகளை மொழியாக்கம் செய்ய மொழி பெயர்ப்பாளர்கள், குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத் தாளர்கள் நியமிக்கப்படுவார்கள்; உயர் நீதிமன்ற கணினிகளில் தமிழ் மென்பொருள் வசதி ஏற்படுத்தப்படும்; தீர்ப்புத் திரட்டு என்ற பெயரில் வெளியாகும் தமிழ் இதழில் குறைந்த எண்ணிக்கையிலேயே தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையை மாற்றி, அதிக எண்ணிக்கையிலான தீர்ப்புகளை முழுமையான மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழ் சட்ட புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகம் அமைத்துத் தரப்படும்; அந்த நூலகத்திற்கு சட்ட மொழிபெயர்ப்புகள் மற்றும் சொல்லகராதிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தரப்படும் என தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கலைஞர் உறுதியளித்தார்.


ஆனால், அதன்பின் சுமார் 12 ஆண்டுகள் ஆகும் நிலையில் கலைஞர் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை; தமிழை வழக்காடும் மொழியாக்குவதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிப்பது சாத்தியமற்ற, கடினமான ஒன்றல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மத்திய ஆட்சியாளர்களின் தமிழுக்கு எதிரான மனநிலை மட்டும் தான் இதற்குத் தடையாக உள்ளது.


தமிழை நீதிமன்ற மொழியாக்க ஏதேனும் ஒரு முட்டுக்கட்டையை போட வேண்டும் என்று நினைத்த முந்தைய மத்திய அரசு, இந்த விஷயத்தில் தாமாக முடிவெடுப்பதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டது. உச்சநீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, தமிழகத்தின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக சம்பந்தப்பட்ட மாநில மொழியை அறிவிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்கத் தேவையில்லை; மத்திய அரசே முடிவெடுத்து குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கலாம் என்று சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக இருந்த சுதர்சனநாச்சியப்பன் 2015&ஆம் ஆண்டில் அறிவித்தார். ஆனாலும் அதை செயல்படுத்த மத்திய ஆட்சியாளர்களுக்கு மனம் வராதது கண்டிக்கத்தக்கதாகும்.


நான்கு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிப்பதில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையும், கோரிக்கை மனு கொடுத்ததையும் தவிர தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.


தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மதுரை வழக்கறிஞர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.