ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை சிறையில் இருந்து 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிறையில் இருந்த 8 சீக்கியவர்களை விடுவிக்க சம்மதித்த மத்திய அரசு 7 தமிழர்களை விடுவிக்க மறுத்ததாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 1991 ஆண்டு மே 21 ஆம்தேதி ஸ்ரீபெரும்புதூரில் அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் உலகமே அதிர்ச்சி அடைந்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. 


அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


அதன் அடிப்படையில் அவர்களை விடுவிப்பதை மத்திய அரசு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை. அதன் பிறகு 7 தமிழர்களின் விடுதலை குறித்து மீண்டும் உச்சநீதிமன்றம் கதவு தட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி, அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிவிட்டதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் இதுவரை பதிலளிக்கவில்லை.


இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன் பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.