ஏழை எளிய பெண்களுக்கு உதவிய திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் திட்டத்தைத் தமிழக அரசு கைவிடக் கூடாது என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் சார்பில் 5 வகை திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஏழைப் பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம், கலப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதியுதவித் திட்டம், கைம்பெண்களின் மறுமணத்துக்கு டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம், கைம்பெண்களின் மகள்களுக்கு ஈவெரா மணியம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு அன்னை தெரசா திருமண நிதியுதவித் திட்டம் ஆகியவை தமிழக மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தன. இதனால் நிறைய பேர் பயனடைந்து வந்தனர். 


இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்காக மாதம் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க |  68,375 கோடி ரூபாய் முதலீடு; 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்



இத்திட்டத்தைக் கல்வியாளர்கள், முற்போக்காளர்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றனர். உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கவும், பெண்கள் உயர்கல்வி பயிலவும் இத்திட்டம் பெரிதும் பயன்படும் என்று தெரிவித்தனர். ஆனால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் திருமண நிதியுதவித் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில்தான் பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் 4 கிராம் என அறிவிக்கப்பட்டு, நிதியுதவியுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக அறிவித்து, நிதியுதவியையும் வழங்கினார். 


இந்நிலையில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பதாலேயே இத்திட்டம் முடக்கப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். ஆண்டுக்கு ரூ.3,33,251 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு ரூ.750 கோடி ஒதுக்குவது என்பது பெரிய விஷயமா என்று கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் பி.சுகந்தி, சமூகநலத் துறை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோரும் திருமண நிதியுதவித் திட்டத்தை நிறுத்துவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல என்றும், தொடர்ந்து அதன் தேவை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று இதே கோரிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி முன்வைத்தார். 



சட்டப்பேரவையில் இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமதி விஜயதாரணி, கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இதனால் வீடு கட்டும் திட்டத்திற்கு கொடுக்கப்படும் நிதி உதவி 2.50 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவியும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருத்து பார்க்கலாம். 


மேலும் படிக்க | கொளுத்தும் வெயில்... தவிக்கும் விலங்குகள் - அண்ணா உயிரியல் பூங்காவின் ஏற்பாடுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G