கொளுத்தும் வெயில்... தவிக்கும் விலங்குகள் - அண்ணா உயிரியல் பூங்காவின் ஏற்பாடுகள்

அதிகரித்திருக்கும் வெப்பநிலையை வனவிலங்குகள் சமாளிக்க அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Last Updated : Apr 6, 2022, 03:44 PM IST
  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்பாடுகள்
  • வெப்பத்திலிருந்து வனவிலங்குகளை காக்க ஏற்பாடு
  • 122 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அதிகபட்ச வெயில்
கொளுத்தும் வெயில்... தவிக்கும் விலங்குகள் - அண்ணா உயிரியல் பூங்காவின் ஏற்பாடுகள் title=

வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அதிகம் இருக்கிறது. குறிப்பாக 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெப்ப நிலை அளவு அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்தது. நடப்பாண்டின் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 33.1 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை அளவாக 20.24 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். அதேபோல் வன விலங்குகளும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்துவருகின்றன.

இந்நிலையில், வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனவிலங்குகள் வெப்பத்தை சமாளிக்கும்விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “அதிக வெப்பநிலை அனைத்து வன விலங்குகளுக்கும் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெப்பமான நாட்களில் வன விலங்குகளை நிர்வகிப்பதற்கு அறிவார்ந்த முன்னோக்கி திட்டமிடல் தேவைப்படுகிறது.

Vanadalur Zoo

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அனைத்து பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றுக்கான தனித்துவமான மற்றும் புதுமையான கோடைகால மேலாண்மைத் திட்டத்தைப் பின்பற்றிவருகிறது. அனைத்து விலங்குகளுக்கும் போதுமான நிழல் மற்றும் போதுமான தண்ணீர் வழங்கப்படுகின்றன. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை வழங்கப்படுகின்றன.

Vandalur Zoo

காண்டாமிருகம். யானை. நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி. வரிக்குதிரை போன்ற பெரிய தாவர உண்ணி விலங்குகளுக்கு தண்ணீர் மழை மற்றும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. மஞ்சோன் புல் ஓலைக் கொட்டகைகளும் கோடைக்கு முன்னதாகவே அனைத்து விலங்கு இருப்பிடங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

பூங்காவில் உள்ள யானைகளுக்கும் தண்ணீர் மழை அளிக்கப்பட்டு, வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிக்க ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளை குளிர்விக்க சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மான் அடைப்புகளுக்கும் புதிய ஓலைக் கொட்டகைகள் வழங்கப்பட்டுள்ளன.

Vanadalur Zoo

பெரும்பாலான பறவை இருப்பிட அடைப்புகளின் மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு. பகலின் வெப்பமான நேரங்களில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் இருப்பிடங்களில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. நெருப்புக்கோழிகள், உட்சென்று காணும் நிலப்பறவைகள் வாழுமிடங்கள் மற்றும் நீர்பறவை பறவைக் கூடங்களில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க அயல்நாட்டுப் பறவைகள். நீர் மற்றும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் நிழல் வலைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முதல்வர் முக ஸ்டாலினின் உரை ஹிந்தியில் : கிளம்பிய எதிர்ப்புகள்

மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும். குரங்கினங்கள் மற்றும் கரடிகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைந்த பழங்களும் வழங்கப்படுகின்றன. உயிரியல் பூங்கா மற்றும் உலாவிடப்பகுதியில் உள்ள மான் இனங்களுக்கு கூடுதல் நிழல், தண்ணீர் மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன, வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தை அடைப்புகளுக்குள் சூரிய ஒளியை துண்டிக்கும் நிழல் வலைகள் வழங்கப்பட்டுள்ளன.

Vanadalur Zoo

அதிக வெப்பம் இருந்தபோதிலும், வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் வருகின்றன. இவற்றுக்காக பனித்தூரல் மற்றும் மூடுப்பணி அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தேன் மற்றும் விருந்தோம்பும் தாவரங்களுக்கு போதுமான நிழல்வலை கொடுக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படுகிறது. விஞ்ஞான கோடைக்கால மேலாண்மை திட்டத்தால் வெப்பத்தை தணிப்பதில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்து விளங்குகிறது, கோடை காலத்தில் ஊர்வனங்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. 

மேலும் படிக்க | 68,375 கோடி ரூபாய் முதலீடு; 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அவற்றின் உடல்நலனை மேம்படுத்தும் வகையில், வெப்ப நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாம்பகத்தில் மண் மேடுகள் மற்றும் மண் பானைகள் ஆகியவை அவற்றின் வெவ்வேறு உடலியல் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு வேறுபட்ட வெப்பநிலையை உறுதி செய்வதற்காக பல அடுக்குகளில் வழங்கப்பட்டுள்ளன. பாம்புகளுக்கு செரிமானம், தோலுரித்தல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு வெவ்வேறான வெப்பநிலைகள் தேவைப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News