தமிழக வறட்சி நிவாரணத்திற்கு ரூ.2,096 கோடி தர மத்திய அரசு பரிந்துரை
தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.2,096 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தேசிய செயற்குழுவின் துணை கமிட்டியோ ரூ.1,748.28 கோடி மட்டுமே தர பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு விவசாயம் பொய்த்து விட்டது. இதனையடுத்து மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பாக விடுக்கப்பட்டது.
இதனையடுத்து மத்திய குழு கடந்த ஜனவரி 22 முதல் 25-ம் தேதி வரை ஆய்வு செய்தது. தமிழக அரசு வறட்சி நிவாரணமாக சுமார் நாற்பதாயிரம் கோடி கேட்ட நிலையில், மத்தியக் குழுவோ இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கே வறட்சி நிவாரண நிதி தர பரிந்தரைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.