பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்ததற்காக யூகோ வங்கி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு  அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும், அதற்கான இடங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களில் 8.71%, அதாவது 116 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக அநீதி கண்டிக்கத்தக்கது ஆகும்.


பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மராட்டியம், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி ஆகிய  4 வங்கிகளுக்கு 1417 அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடத்த உள்ளது. அதற்கான ஆள் தேர்வு அறிக்கையை கடந்த 4&ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 1417 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 382, பட்டியலினம் 212, பழங்குடியினர் 107, உயர்வகுப்பு ஏழைகள் 141 என 842 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். உயர்வகுப்பு ஏழைகளுக்கு 141 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில் ஓர் இடம் கூடுதலாக 142 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 701 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு  300, பட்டியலினத்தவருக்கு 196, பழங்குடியினருக்கு 89 என மொத்தம் 585 இடங்கள் மட்டும் தான்  ஒதுக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 82 இடங்கள், பட்டியலினத்தவருக்கு 16 இடங்கள், பழங்குடியினருக்கு 18 இடங்கள் 116 இடங்கள் குறைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.


ALSO READ | நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covid-19 தடுப்பூசி வெறும் ₹.225 மட்டுமே...!


வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆள்தேர்வு அறிவிக்கையை ஆய்வு செய்து பார்த்த போது, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மராட்டியம், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவை இட ஒதுக்கீட்டு  விதிகளை முழுமையாக கடைபிடித்துள்ள நிலையில், யூகோ வங்கி மட்டும் முழுமையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. யூகோ வங்கிக்கு 350 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவற்றில் 208 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கும், 142 இடங்கள் பொதுப் போட்டிப் பிரிவுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 94 இடங்களை மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஒதுக்கியுள்ள அந்த வங்கி நிர்வாகம், 256 இடங்களை பொதுப்போட்டிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது, அனைத்துப் பிரிவினருக்கும் சேர்த்து 59.50% இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக 27% மட்டுமே ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதிலும் கூட உயர்வகுப்பு ஏழைகளுக்கு முழுமையாக 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிர்வாகம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 4%, பட்டியலினத்திற்கு 10%, பழங்குடியினருக்கு 3% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது.


இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொண்டாலும், அதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீட்டு விதிகளின்படி இருக்க வேண்டியதை விட மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய பின்னடைவு பணியிடங்கள் ஒவ்வொரு வங்கியிலும் அதிகமாக உள்ள நிலையில், புதிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, ஓபிசி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 23% குறைக்கப்படுவதை  ஏற்க முடியாது. அதேபோல், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 5 விழுக்காடும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 4.5 விழுக்காடும் குறைக்கப்படுவதை ஏற்க முடியாது. உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு மட்டும் எந்த வகையில் குறையாமல் பார்த்துக் கொள்ளப்படும் போது, பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவு மட்டும் குறைக்கப்படுவது தெரியாமல் நடக்கும் தவறு அல்ல.... தெரிந்தே திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல் தான் என்பதில் ஐயமில்லை.


ALSO READ | செப்டம்பரில் திறக்கப்படுமா பள்ளிகள்? வரவுள்ளது மிகப்பெரிய அறிவிப்பு!!


மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனப் பணிகளிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள், கிரீமிலேயர் எனப்படும் சமூக அநீதி ஆயுதத்தை பயன்படுத்தி, பொதுப்போட்டிப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, உயர்சாதியினருக்கு மறைமுகமாக தாரை வார்க்கப் படும் கொடுமை நீண்டகாலமாக  நடைபெற்று வருகிறது. ஆனால், இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமின்றி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு இடங்களும் வெளிப்படையாகவே பொதுப்போட்டிப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு உயர்வகுப்பினருக்கு வழங்க சதி நடைபெறுகிறது.


யூகோ வங்கி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒட்டுமொத்தமாகவே வெறும் 27% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ள நிலையில், அதை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் எவ்வாறு ஏற்றுக் கொண்டது என்பது தெரியவில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் சரியான அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கும் கடமை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்திற்கு உள்ளது. ஆனால், அந்த நிறுவனம் கடமை தவறி விட்டதாகவே தெரிகிறது. எனவே, இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆள் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை வெளியிட வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்ததற்காக யூகோ வங்கி மீதும், அதன் மோசடிக்கு துணை போனதற்காக வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மீது விசாரணை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.