தொற்றின் அளவு சற்று குறைந்தது: நிம்மதி தரும் செய்தியை தந்தார் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மக்களையும் அரசாங்கத்தையும் பாடாய் படுத்து வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துண்டே இருக்கிறது.
தமிழகத்திலும் (Tamil Nadu) கடந்த சில நாட்களாக தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதகிருஷ்ணன் (Radhakrishnan) இந்த நல்ல செய்தியை அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலையைக் குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அவ்வப்போது செய்தியாளர் சந்திப்பு வாயிலாக மக்களுக்கு தகவல்களை அளித்து வருகிறார். இன்றும் அவர் சமீபத்திய நிலவரம் குறித்த தகவல்களை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அளவு குறைந்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வெளியே வராவிட்டால், தொற்றின் பரவலில் அதிக வித்தியாசம் தெரிகின்றது என்பதை இது விளக்குகின்றது. ஆகையால், வரும் நாட்களிலும் மக்கள் தேவை இல்லாமல், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
ALSO READ: டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்: நீதிமன்றத்தில் முறையீடு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. நேற்று காலை முதல் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த பல வகையான கட்டுப்பாடுகள் காரணமாக, மிக அதிகமாக பரவிக்கொண்டிருந்த தொற்றின் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளதைக் காண்கிறோம். மக்கள் கூட்டமாக ஒன்று சேரும் பொது நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றிலும் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த பரவல் மேலும் குறையக்கூடும் என ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் கண்டிப்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், முகக்கவசம் (Facemask) அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது என அனைத்து விதிமுறைகளையும் மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றார்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, அதி வேகமாக பரவிக்கொண்டிருந்த தொற்றின் அளவை சற்று கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இன்னும் தீவிரமாக இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால், தொற்றின் பரவல் இன்னும் குறையும் என்றார் ராதாகிருஷ்ணன்.
கொரோனாவுக்கான பரிசோதனையின் அளவு குறைந்துள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னர் இருந்தது போலவே, ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார் தமிழக சுகாதாரச் செயளர் ராதாகிருஷ்ணன்.
ALSO READ: புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட அரசு உத்தரவு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR