கொடுங்கையூர் தீவிபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல்
சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேக்கரியின் கதவை திறந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.
சிலிண்டர் வெடித்ததால் தீ ஜூவாலைகள் பரவி தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் மீது பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு தீயணைப்பு வீரர் இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை - நிவாரணம் வழங்கப்படும். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும். என்றார்.