ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம்  பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை.


மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டைக் காரணமாக 7 தமிழர்களின் விடுதலை கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 7 தமிழர்களின் நடத்தை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனாலும், இன்று வரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவையும் எடுக்கவில்லை.


இந்நிலையில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. முன்கூட்டிய விடுதலை செய்யக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012-ல் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணையை ஜூலை 30-க்கு ஒத்தி வைக்க அரசு சார்பில் கேட்கப்பட்டது. வழக்கில் அரசு முடிவெடுத்த பின்பு ஏன் தாமதம்..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்” என தமிழக அரசு கூறியுள்ளது.