ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவை!!
தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
புதுடெல்லி: தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவேவை சந்தித்தனர். அப்போது, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தினர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் மத்திய மந்திரி மற்றும் அதிமுக எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய மந்திரி:-
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தம்பிதுரை பேசும்போது:-
ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் தமிழக கலாச்சாரம் பாதுகாக்கப்படும். ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்தப்படுவதில்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறோம். என்று கூறினார்.