லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமைக்கப்பட உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருப்பர். 


இந்த மூவர் தேர்வுக்குழுவானது, தகுதிவாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக சர்ச் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும். நியமிக்கப்படும் தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும். பின்னர் தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.


இந்த நடைமுறையின் முதற்கட்டமாக, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலினுக்கு அரசு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால் இக்கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என முக ஸ்டாலின் மறுத்துவிட்டார். 


இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படுவது என முடிவெடுத்துள்ளனர். 


மேலும் தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.