ரிஷிவந்தியம் தனி தாலுக்காப் பிரச்சனை - ஓர் அலசல்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுக்கா அமைக்க வலியுறுத்தி போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் ஒன்றியம் கடந்த 1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரிஷிவந்தியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இல்லாததால் தற்காலிகமான கட்டிடத்தில் அலுவலகம் இயங்கியது. மூன்று ஆண்டுகள் இந்த தற்காலிக வட்டார வளர்ச்சி அலுவலகம் ரிஷிவந்தியத்தில் இயங்கிய நிலையில், 1964 ஆம் ஆண்டு இந்த அலுவலக கட்டிடம் அரியலூருக்கு மாற்றப்பட்டது. அங்கும், தற்காலிகமான கட்டிடத்தில்தான் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வந்தது. அதன்பின்னர், 1971ஆம் ஆண்டு வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் நிரந்தர வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட்டது. மொத்தப் பணியும் அங்கு மாற்றப்பட்டது. தற்போதுவரை அந்தக் கட்டிடத்தில்தான் வட்டார வளர்ச்சி அலுவல் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் படிக்க | அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: விஜயகாந்த் வேதனை
சரி, இதில் ரிஷிவந்திய மக்களுக்குப் பிரச்சனை என்னவென்றால் ? வாணாபுரம் பகுதியில்தான் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. அதாவது, கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளிட்ட அரசின் முக்கியமான அலுவலகங்கள் அனைத்தும் வாணாபுரம் பகுதியிலேயே இருக்கின்றன. ரிஷிவந்தியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே இயங்கி வருகிறது. ஒன்றியம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலைநகரமாக உள்ள ரிஷிவந்தியத்தில் அரசு அலுவலகங்கள் ஒன்று கூட இல்லை என்பதும், அரசு சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர்.
யதார்த்த சிக்கலும் ரிஷிவந்தியம் பகுதி மக்களுக்கு உண்டு. அதாவது, சங்கராபுரம் தாலுகா அலுவலத்திற்கு நேரடியாகச் செல்ல பேருந்து வசதி இல்லை. எனவே, தியாகதுருகம் சென்று, கள்ளக்குறிச்சி வழியாக 40 கிலோமீட்டர் தூரம் பயணித்துத்தான் ரிஷிவந்தியம் மக்கள் சங்கராபுரத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு ரிஷிவந்தியம் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக புலம்புகின்றனர். தொடர் சிக்கல் காரணமாக, ரிஷிவந்தியத்தை தனித் தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கையில் எடுத்தனர் அப்பகுதி மக்கள், கடந்த 5 ஆண்டு காலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் மாறிமாறித் தலைவர்கள் வாக்குறுதிகளாக அளித்துவிட்டுச் செல்வதும், தேர்தல் முடிந்த பின்பு கண்டுகொள்ளாத நிலையும் இருந்துவருவதாக ரிஷிவந்திய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், வாணாபுரம் பகுதி புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரிஷிவந்தியம் பகுதி திமுகவினர், திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் திறந்து வைத்த தண்ணீர் பந்தலை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் சட்டப்பேரவை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிஷிவந்தியம் பகுதியில் 300க்கும்ம ஏற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர், சங்கராபுரம் வட்டாட்சியர், திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், ரிஷிவந்தியத்தை தனித் தாலுகாவாக அறிவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்றுமுதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை முதலே ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோவிலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதாக கூறப்படும் நிலையில், போராட்டத்திற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு அதிகாரிகளும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஆனாலும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாக தகவல் பரிமாறப்பட்டு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR