ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்; மீண்டும் உள்ளாட்சிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக”கொண்டாடப்படும் என்றும், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Last Updated : Apr 22, 2022, 02:48 PM IST
  • உள்ளாட்சிகளின் உரு சிதையா வண்ணம், தனிக்கவனம்
  • மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக” கொண்டாடப்படும்
  • இந்த ஆண்டு முதல் ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்
ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்; மீண்டும் உள்ளாட்சிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு  title=

மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக”கொண்டாடப்படும் என்றும், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி எண் 110-கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

''வருகிற 24.4.2022 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சில அறிவிப்புகளை இந்த மாமன்றத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன். உள்ளாட்சி என்பது மக்களாட்சியினுடைய ஜனநாயகத்தின் ஆணிவேர்.   அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசினுடைய நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும். 

திமுக அமையும் போதெல்லாம், உள்ளாட்சிகளின் உரு சிதையா வண்ணம், உயர்த்தி வலிமைப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருவதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்திடவும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏதுவாக, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை ‘உள்ளாட்சிகள் தினம்’ எனக் கொண்டாட வேண்டுமென்று நான் துணை முதலமைச்சராக இருந்தபோது முடிவு மேற்கொள்ளப்பட்டது.  2007 நவம்பர், 1 ஆம் நாள் அன்று உள்ளாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டது.  இறுதியாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டு, அதற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க |  அமைச்சர் முன்மொழிந்துள்ள திட்டம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்: ராமதாஸ்

கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக” கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

கிராமங்களை வலிமைப்படுத்தவும், அங்கே வளர்ச்சியினை ஊக்கப்படுத்தவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்கள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கி, கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம சபைக்கென குறிப்பிட்ட அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1998 ஆம் ஆண்டில் முதல் முறையாக, ஆண்டிற்கு 4 முறை, குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாணையாக வெளியிட்டார்கள்.  அதனடிப்படையில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் தேவையின் அடிப்படையில் மிகக் குறுகிய கால அறிவிப்புகள்மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.  

இவ்வாறு குறுகிய கால அறிவிப்புகள்மூலம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் போது, மக்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது என்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.  எனவே, இதைக் கருத்திற்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் பங்கேற்பினை உறுதி செய்வது அவசியம் எனக் கருதி, இந்த ஆண்டு முதல், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அந்த வகையில், ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை க்கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

மேலும் படிக்க |  மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்...மாற்றி மாற்றி பேசும் அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

 

 

 

Trending News