ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. நாளை வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிரகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
வரும் டிசம்பர் 21-ம் நாள் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடுபிடித்து நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.
இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் ஆய்வு நடத்திய சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று மதியம் டெல்லி சென்று அறிக்கை அளித்துள்ளார். பணப் பட்டுவாடா புகார் குறித்து, அறிக்கை அளிப்பதற்காக, டெல்லி சென்று உள்ளதால், இம்முறையும் பணப் பட்டுவாடா நடந்துள்ளதால் தேர்தல் ரத்தாகிறது என ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து தேர்தல் ரத்தானதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அவ்வாறு வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ரத்தாகும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.