#ஆர்கேநகர் இடைத்தேர்தல்: தினகரனை முற்றுகையிட்ட பெண்கள்
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பெண்கள் முற்றுகை:-
அப்போது பெண்கள் சிலர் தினகரனை முற்றுகையிட்டு, ‘‘வெள்ளத்தின்போது எங்கள் உடைமைகள் மற்றும் சொத்துக்கள் உட்பட லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள் அழிந்தன. ஆனால், எங்களுக்கு அரசின் நிவாரணம் ரூ.5 ஆயிரம் கூட கிடைக்கவில்லை. எங்களுக்கு ஆறுதல் கூறக்கூட கட்சிக்காரர்கள் யாருமே இந்த பக்கமே வரவில்லை’’ என ஆவேசப்பட்டனர். அவர்களை தினகரனுடன் வந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர்.
குடிசை பகுதி மக்கள் வழிமறிப்பு:-
பிறகு குடிசை பகுதியில் பிரச்சாரம் செய்த தினகரனை அப்பகுதி மக்கள் வழிமறித்து, ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. எங்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கொடுப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். அதற்கான கோப்புகளும் தயார் செய்யப்பட்டன. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றனர். ‘‘ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை முடித்துக் கொடுக்கிறேன்’’ என தினகரன் உறுதியளித்தார்.
அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:-
அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
வீடில்லா 57 ஆயிரம் பேருக்கு வீடு, தண்டையார்பேட்டையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, 10 நடமாடும் மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை மையம், புதிய மீன் அங்காடி, முக்கிய பேருந்து நிறுத்தங்கள், சாலையோர பூங்காக்களில் கைபேசி சார்ஜிங் மற்றும் கட்டணமில்லா வைபை இணைய வசதி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.