சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்தது. இந்நிலையில் ஆர்கேநகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலில் அதிமுக உடைந்து 3 பிரிவுகளாக போட்டியிடுகிறது. திமுக, பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.


தேர்தலில் போட்டியிட அதிமுக அம்மா சார்பில் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருத கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 


வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்களது சொத்து கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். 


டி.டி.வி.தினகரன் (அதிமுக அம்மா):-


டி.டி.வி.தினகரன் அசையும் சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 45 ஆயிரம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.57 லட்சம் எனக்குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 18 லட்சம் எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் எனவும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது. தன் மீது பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்துள்ளார். 


மதுசூதனன் (அதிமுக புரட்சி தலைவி அம்மா):-


மதுசூதனனுக்கு ரூ.18 லட்சத்து 89 ஆயிரத்து 676-க்கு அசையும் சொத்துக்களும், மனைவி ஜீவா பெயரில் ரூ.51 லட்சத்து 72 ஆயிரத்து 658 சொத்து மதிப்பும் உள்ளன.


அனைத்து நிலம், புலம் உள்பட மதுசூதனன் பெயரில் ஒரு கோடியே 37 லட்சம் அசையா சொத்துக்களும், மனைவி பெயரில் 3 கோடியே 30 லட்சம் அசையா சொத்துக்களும் உள்ளன.


மருது கணேஷ் (திமுக):-


திமுக வேட்பாளர் மருது கணேசின் அசையும் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 531. மனைவி பெயரில் ரூ.7 லட்சத்து 8606 உள்ளது.


லோகநாதன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி):-


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனின் சொத்து மதிப்பு ரூ.6.05 லட்சமாகும்.


தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை):-


ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.05 கோடி எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்துள்ளார். 


மதிவாணன் (தேமுதிக):- 


மதிவாணன் தனது சொத்தின் மதிப்பு ரூ.40.69 லட்சம் எனவும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் சொத்து மதிப்பு ரூ.6.5 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.