சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக, அதிமுக இன்று அறிவிக்க உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்கேநகர் தொகுதி காலியாக இருந்தது.


கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக இன்று வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் சசிகலா அணியின் ஆட்சி மன்றகுழு இன்று கூடி வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளது. 


அந்த அணியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சி ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. தேமுதிக வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அறிவிக்க உள்ளது. 


நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.