ஆர்கேநகர் தொகுதி அதிமுக-வின் 3 அணிகள் போட்டி
கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது.
சென்னை: கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது.
கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் முடிவுதான் பல கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமையும். எனவே இந்த தொகுதியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும்.
அதிமுக-வை பொறுத்த வரை இப்போது 3 அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றன. சசிகலா மற்றும் ஓபிஎஸ். தலைமையில 2 அணிகள் உள்ளன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்.
இந்த 3 அணிகளுமே அதிமுக தொண்டர்களில் தங்களுக்கென்று தனி ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளன.
சசிகலா தலைமையிலான அதிமுக-வை விட அதிக வாக்குகளை பெறாவிட்டால் ஓபிஎஸ் அணி மற்றும் தீபா வின் அரசியல் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக் குறியாகி விடும்.
அதே சமயம் சசிகலா அணி குறைந்த வாக்குகளை பெற நேர்ந்தால் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை சந்திக்கும்.
சசிகலா தரப்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு இழுத்து வந்தனர். எம்.ஜி.ஆர். - அம்மா- தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் இறங்கி இருக்கும் தீபா ஆர்.கே.நகரில் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார்.
எனவே ஆர்கேநகர் தொகுதியில் இப்போதே அரசியல் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.