ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயலினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மக்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளதால், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நலத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக இந்தத்தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்குவது குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளார். மேலும், இதனை முறையாக தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த, ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சென்னை மாநகர ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த அரசாணையில், சிறப்பு நிதி உதவி பெறும் பயனாளிகளை கணக்கெடுப்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளையும்  அரசு இணைத்துள்ளது. அதில் ஊரக மற்றும் நகர்ப்புறம், வட்டாரம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக பயனாளிகளை கணக்கெடுத்தல், புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டும், சென்னை மாநகராட்சியில், அதன் ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.