தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் ‘ஒக்கி’ புயலால் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டு வருகிறார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக வந்திறங்கினார் மோடி. அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் பின்னர், தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். அப்போது தமிழக அரசு சார்பில் ஒக்கி புயல் நிவாரண நிதி கோரி, பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அந்த மனுவில் புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.4047 கோடி  வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


இதனையடுத்து, குமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளை மோடி சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும் என்று மோடியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 


புயலால் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.