முதல் தினத்தை சிறையில் சசிகலா எப்படி கழித்தார்?
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களுரு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிட்டது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்து போய்விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இதனையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா நேற்று பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று இரவு சிறையில் சப்பாத்தி, களி, சாம்பார் கொடுக்கப்பட்டது. மேலும் தன்னுடன் கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டு இருக்கிறார். மற்றபடி இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. சிறையில் அணியக்கூடிய வெள்ளை நிறத்தில் நீல நிற பார்டர் போட்ட சேலை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மாத்திரைகளையும், ஆயுர்வேதிக் டானிக்கையும் குடித்தார். நீதிமன்றம் வழங்கிய பல்வேறு ஆவணங்களில் கையொப்பமிட வேண்டி இருப்பதால் எல்லா ஆவணங்களையும் படித்துப்பார்த்து கையொப்பமிடுகிறார்.
சிறையில் முதல் தளத்திலுள்ள, எட்டுக்கு பத்து என்ற அளவிலான அறைதான் இளவரசி, சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கட்டிலோ, பெட்டோ கிடையாது. கீழே விரித்துக்கொள்ள போர்வையும், உடலை மூட கம்பளியும் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் குளிர் சீதோஷண நிலையில், இருவருமே கீழேதான் படுத்துள்ளனர். டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே பெட் கொடுக்கப்படுமாம்.
இவருடன் கைது செய்யப்பட்ட இருவரும் வெவ்வேறு அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், என்று பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சசிகலா இன்று காலை உணவு மெனுவில் புளிசாதம் உடன் சட்னி சாப்பிட்டதாக தகவல் வந்துள்ளது.
மேலும் "ஒரு சில நிமிடங்கள் தியானம்" செய்தார் சசிகலா.