சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பு ஏற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை தொட்டு வணங்கி விட்டு பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அதிமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்மாடியில் உள்ள அரங்குக்கு சென்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.


அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதை ஏற்றுக்கொண்டு சசிகலா இப்பதவிக்கு வந்துள்ளார். இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதுதான் அவர் முதலாவது பொது இடத்து பேச்சு ஆகும்.


எனக்கு எல்லாமுமாய் இருந்தவர் ஜெயலலிதா. நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்தவர். என்னை பொதுச்செயலராக தேர்வு செய்ததற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் அன்பு கட்டளையை ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துள்ளது. நான் கனவிலும் நினைக்காத ஒன்று நடந்துவிட்டது.


நன்கு உடல்நலம் தேறிவந்த ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்துவிட்டார். எதற்காகவும் நம்மை கைவிடாத ஜெயலலிதா, மரணத்தின் மூலம் அனைவரையும் கைவிட்டுவிட்டார். நம் அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. ஆயிரமாயிரம் கூட்டங்களுக்கு ஜெயலலிதாவுடன் நான் சென்றுள்ளேன். ஆனால் இப்போது மைக் பிடித்து பேச வேண்டிய நிலை எனக்கு வந்துவிட்டது. எஞ்சிய வாழ்நாளை அதிமுகவுக்காக, தொண்டர்களுக்காக வாழவேண்டிய உறுதி எடுத்துள்ளேன்.


விசுவாசத்தையும் செயல்பாட்டையுமே ஜெயலலிதா நம்மிடம் எதிர்பார்த்தார். துணிச்சலின் பிறப்பிடமாக இருந்தவர் அவர்.எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை, நாணயமும் வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவோம். தொண்டர்களை கண் இமையாக காப்போம். அதிமுக அரசை குறைவராமல் பாதுகாப்போம். எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்வாறு சசிகலா பேசினார். 


இந்தநிலையில் உரையாடிக்கொண்டு இருந்த சசிகலா கண்ணீர்விட்டு அழுதார்.